Friday, November 14, 2008

நிலவில் இன்று தடம் பதிக்கிறது மூவர்ணக்கொடி

சென்னை : சந்திரயான்-1 செயற்கைக்கோளில் உள்ள எம்.ஐ.பி., கருவி, இன்றிரவு நிலவின் மேற்பரப்பில் மோதி இறங்கவுள்ளது. இதன் மூலம் இந்திய மூவர்ணக்கொடி, முதல் முறையாக நிலவின் மேற்பரப்பில் தடம் பதிக்கவுள்ளது. இந்தியா நிலவுக்கு அனுப்பிய முதலாவது செயற்கைக்கோளான சந்திரயான், தனது இறுதி சுற்றுப்பாதையான நிலவிலிருந்து 100 கி.மீ., தொலைவில் தற்போது சுற்றி வருகிறது. சந்திரயானில் மொத்தம் 11 ஆராய்ச்சி கருவிகள் உள்ளன. இவற்றில் ஒன்றான 29 கிலோ எடை கொண்ட எம்.ஐ.பி., (மூன் இம்பாக்ட் புரோப்) கருவி, சந்திரயானில் இருந்து இன்று இரவு 8 மணிக்கு கழற்றி விடப்படவுள்ளது.


சந்திரயான் திட்ட இயக்குனர் அண்ணாதுரை கூறியதாவது: எம்.ஐ.பி., கருவியை பிரித்து விடுவதற்கான உத்தரவு, பெங்களூருவில் உள்ள, "இந்தியன் டீப் சயின்ஸ் நெட்வொர்க்' மையத்திலிருந்து இன்று இரவு 8 மணிக்கு பிறப்பிக்கப்படும். எம்.ஐ.பி., கருவியில் உள்ள இன்ஜின் இயக்கப்பட்டு, சந்திரயானில் இருந்து நிலவை நோக்கி செலுத்தப்படும். இதையடுத்து, எம்.ஐ.பி., கருவி பிரிந்து, நிலவை நோக்கி பயணிக்கும். 25வது நிமிடத்தில் எம்.ஐ.பி., கருவி நிலவில் மோதி இறங்கும். இக்கருவியிலிருந்து பெறப்படும் புகைப்படங்கள், வரும் 16ம் தேதி நமக்கு கிடைக்கும். இவ்வாறு அண்ணாதுரை தெரிவித்தார். எம்.ஐ.பி., கருவியின் நான்கு புறங்களிலும் இந்திய மூவர்ணக்கொடி பொறிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய மூவர்ணக்கொடி முதல் முறையாக நிலவின் மேற்பரப்பில் தடம் பதிக்கவுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக, நிலவின் மேற்பரப்பில் தனது நாட்டுக் கொடியை இடம் பெறச் செய்த நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா நாளை பெறவுள்ளது.

Source : Dinamalar

No comments: