Saturday, November 29, 2008

வேற்றுக்கிரகமொன்றில் காபனீரொக்சைட் கண்டுபிடிப்பு.


நமது பூமியில் இருந்து 63 ஒளியாண்டுகளுக்கு அப்பால் இருக்கும் ஒரு நட்சத்திரத்தை நெருங்கிய ஒழுக்கில் சுற்றி வரும் எமது வியாழக்கிரக்கத்தின் திணிவை ஒத்த கிரகம் ஒன்றின் (HD 189733b )வளிமண்டத்தில் காபனீரொக்சைட் இருப்பது ஹபிள் விண் தொலைநோக்கியில் பொருத்தப்பட்டுள்ள Infrared Camera மற்றும் Multi-Object Spectrometer (NICMOS) கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.

காபன் அடிப்படை உயிரினங்கள் ஒரு கிரகத்தில் இருப்பதற்கான அல்லது இருந்ததற்கான சான்றாக காபனீரொக்சைட், நீர், மெதேன் மற்றும் ஒக்சிசன் வாயுவின் இருப்பு கொள்ளப்படக் கூடியதாக இருப்பினும் மேற்குறிப்பிட்ட கிரகம் அதன் நட்சத்திரத்தை நெருங்கிச் சுற்றிக் கொண்டிருப்பதால் அதன் மேற்பரப்பு வெப்பநிலை மிக அதிகமாக இருப்பதால் அங்கு உயிரினங்கள் வாழ ஏதுவான சூழல் நிலவியிருக்குமா என்பது பற்றி ஆராய்வதில் விஞ்ஞானிகள் தற்போது கவனம் செலுத்தி வருகின்றனர்.

சூரியக் குடும்பத்துக்கு வெளியே நீர் மற்றும் மெதேன் கொண்ட கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது காபனீரொக்சைட் கொண்ட கிரகமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இன்னும் ஒக்சிசன் உள்ள கிரகம் கண்டுபிடிக்கப்பட வேண்டிய நிலை தொடர்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

-குருவிகள்

சந்திரயான் விண்கலனில் வெப்ப உயர்வு.


நிலவை ஆராய இந்தியா அனுப்பிய முதல் ஆளில்லா விண்கலமான சந்திரயான் 1 கலத்தில் வெப்பநிலை அதிகரித்துள்ளதால் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. கலனுக்குள் அதிகரிக்கும் வெப்பநிலையைக் குறைக்க விண்வெளி விஞ்ஞானிகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நிலவை ஆராய கடந்த அக்டோபர் மாதம் 22 ஆம் திகதி இந்தியா சந்திரயான் 1 விண்கலனை ஏவியது. இந்தக் கலன் திட்டமிட்டபடி நிலவு வட்டப் பாதையை இம்மாத துவக்கத்தில் அடைந்தது. பிறகு நிலவின் தரைப் பகுதி மீது சில உபகரணங்கள் அடங்கிய துணைக் கலனையும் வெற்றிகரமாக செலுத்தியது. மேலும் நிலவின் மேல் பரப்பையும், பூமியையும் படம் பிடித்து அனுப்பியுள்ளது.

ஆனால் திடிரென, சந்திரயான் கலனின் உள்ளே வெப்பநிலை வேகமாக உயர்ந்தது கண்டறியப்பட்டது. கலனுக்குள் வெப்பநிலை 50 டிகிரியைத் தொட்டதன் காரணமாக, செயற்கைக் கோளில் உள்ள கணினிகள் உள்ளிட்ட முக்கிய சாதனங்கள் தற்காலிகமாக செயல் நிறுத்தம் செய்யப்பட்டதாக திட்ட இயக்குனர் அண்ணாதுரை தமிழோசையிடம் தெரிவித்தார். இதன் காரணமாக கலனில் நிலவும் வெப்ப நிலை தற்போது 40 டிகிரி அளவுக்கு குறைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

சந்திரனில் தற்போது கோடைக் காலம் என்பதால், சந்திரயான் விண்கலம், சந்திரன் மற்றும் சூரியன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருப்பதால் கலனின் வெளிப்புறத்தில் கடும் வெப்பம் ஏற்படுவதாகவும் அண்ணாதுரை தெரிவித்தார்.

கலனுக்குள்ளே வெப்பத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சந்திரயான் விண்கலன் சந்திரனில் இருந்து 20 டிகிரி அளவுக்கு விலகி சாய்ந்து செல்லுமாறு தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், வெப்ப நிலை குறையாத பட்சத்தில், சந்திரயான் கலத்தின் வட்டப் பாதையை உயர்த்துவது குறித்தும் முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ் வடிவம்: பிபிசி/தமிழ்
-குருவிகள்

Tuesday, November 25, 2008

உலகம் உருவாகியதை அறிய புது முயற்சி




செப்டம்பர் 10 ஆம் நாள் பெய்ஜிங் நேரப்படி பிற்பகல் 3.35 மணிக்கு உலகின் பிக் பேங் எனப்படும் மிகப் பெரிய வெடிப்பு இயற்பியல் பரிசோதனை பிரான்ஸ் சுவிட்சர்லாந்து எல்லையில் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. உலகளவில் மிகவும் எதிர்பார்ப்பையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ள இந்த அறிவியல் ஆய்வின் விபரங்களை அறிய தருகிறோம்.

உலகிலுள்ள பல்வேறு விடயங்களுக்கு 100 விழுக்காடு மனநிறைவு தரும், அறுதியிட்டு சொல்லக்கூடிய விளக்கங்கள் இல்லை. உலகம் தோன்றியது எப்படி என்ற கேள்வியும் அவற்றில் ஒன்று. அறிவியல், தத்துவம், மதங்கள் ரீதியான பலவித விளக்கங்கள் கொடுக்கப்பட்டாலும், அனுமானங்களின் அடிப்படையில் தான் அவை விளக்கப்படுகின்றன. இவ்வாறு இவ்வுலகு, விண்வெளி, பால்வீதி மண்டலங்கள் எல்லாம் அணுவைவிட மிக சிறியதொரு துகளில் ஏற்பட்ட பெரிய வெடிப்பால் உருவானதே என்ற விளக்கம் உள்ளது. அதனை பிக் பேங் அல்லது மிக பெரிய வெடிப்பு கோட்பாடு என்று கூறுவர். அந்த வெடிப்பின்போது கடவுள் துகள் என்று கூறப்படும் மிக நுண்ணிய ஹிக்ஸ் பாசன் துகள் வெளிப்பட்டு 25 வினாடிகள் மட்டும் நீடித்தது. பிறகு அது உலகிலுள்ள எல்லா பொருட்களுடனும் கலந்து விட்டது என்ற அனுமானம் உள்ளது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரை, அணுதான் உலகிலேயே மிக சிறியது என்று நினைத்த அறிவியலாளர்கள் நாட்கள் செல்ல செல்ல அணுவின் துகள்களான புரோட்டான் நியூட்ரான் துகள் அணுவைவிட சிறியவை என்றும் இதை விட நுண்ணிய துகள்கள பல உள்ளன என்று அறிய வந்தனர். அவ்வாறான நுண்ணிய துகளில் கடவுள் துகள் எனப்படும் ஹிக்ஸ் பாசன் துகள் உயிர் உருவாக காரணமாக அமைந்தது என்று எண்ணப்படுகிறது.

இதனை அறிவியல் ரீதியாக உறுதிபடுத்தும் விதமாக இந்த கடவுள் துகளை செயற்கையாக உருவாக்க நடைபெறும் முயற்சி தான் தற்போது நடைபெறும் இயற்பியல் பரிசோதனை. அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டால் உலகு மற்றும் விண்வெளி மண்டலம் தோன்றியது பற்றிய பல்வேறு அறியா புதிர்களுக்கு பதில் தெளிவாகும் என்று எண்ணப்படுகிறது. இம்முயற்சியின் முதல் கட்ட பரிசோதனை செப்டம்பர் 10 ஆம் நாள் தொடங்கியுள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக இத்திட்டப் பணியின் முயற்சிகளை அறிவியலாளர்கள் மேற்கொண்டாலும், 2003 ஆம் ஆண்டு தான் அதன் கட்டுமானப்பணி தொடங்கியது. உலகின் மிகப் பெரிய அறிவியல் பரிசோதனையான இதனை சுவிட்சர்லாந்து பிரான்ஸ் எல்லையருகே அமைத்தனர். 27 மீட்டர் நீளமுடைய மிக பெரிய ஹாட்ரன் மோதல் கருவியை பூமியின் ஏறக்குறைய 300 அடி ஆழத்திலான சுரங்கத்தில் அமைத்தனர். அதாவது இந்த கருவி புரோட்டான்களின் வேகத்தை அதிகரிக்க செய்வதோடு, அவை எதிரெதிராக வரும்போது மோத செய்வதால் ஹாட்ரன் மோதல் கருவி என்கிறோம். 900 கோடி அமெரிக்க டாலர் செலவிலான இத்திட்டப்பணி 20 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளால் ஒருங்கிணைக்கப்பட்டு,. 80 நாடுகளிலுள்ள அறிவியலாளர்களை இப்பரிசோதனை திட்டம் ஈர்த்துள்ளது. 1200 அறிவியலாளர்களை ஈடுபடுத்தியுள்ள பார்வையாளர் நாடாக பங்கேற்றுள்ள அமெரிக்கா 531 மில்லியன் டாலர்களை இதற்காக வழங்கியுள்ளது. ஜப்பான் இன்னொரு பார்வையாளரும் அதிக தொகை வழங்கிய நாடாக உள்ளது.

சீன வானொலி நிலையம்

இறந்தாரை உயிர்ப்பிற்கும் மருத்துவ முயற்சி!


- மருத்துவர் எம்.கே.முருகானந்தன் -


நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். திடீரென நெஞ்சைப் பொத்திக் கொண்டு துடிக்கிறார். அவருக்கு ஏற்கனவே இருதய வருத்தம் இருப்பது உங்களுக்குத் தெரியும். இது மாரடைப்பு என்பது புரிகிறது. அம்பியூலன்சைக் கூப்பிடுவதற்கு முன்னரே சரிந்து விடுகிறார். முதல் உதவிச் சிகிச்சையில் பரிச்சியம் உள்ள நீங்கள் அவரின் நாடித் துடிப்பைப் பார்க்கிறீர்கள், அது நின்று விட்டது. மூக்கில் கை வைத்துப் பார்க்கிறீர்கள், சுவாசமும் நின்று விட்டது. அவசர அவசரமாக இருதய மசாஜ் செய்து செயற்கை சுவாசமும் கொடுக்கிறீர்கள். பிரயோசனமில்லை. வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோது ஏற்கனவே மரணித்து விட்டதாக கூறுகிறார்கள்.

அநியாயச் சாவுதான் என்பதில் சந்தேகமில்லை.முதல் உதவி அறிவுள்ள ஒருவர் அருகிலிருந்து, வேண்டிய உதவியை உடனடியாகச் செய்தும் கூட காப்பாற்ற முடியவில்லை என்பது கவலைக்குரியதுதான்.

உண்மையில் அவர் எப்பொழுது இறந்தார்?

அவரது நிலையை யோசித்துப் பாருங்கள்?

என்ன நடந்தது? அவரது உறுப்புகள் யாவும் இருந்தது இருந்தபடியே எத்தகைய சேதமுமின்றி அப்படியே இருக்கின்றன. குருதி வெளியேறவில்லை. ஆனால் இருதயம் துடிக்கவில்லை, சுவாசப் பையும் இயங்கவில்லை. எனவே மூளையானது உள்ள பிராண வாயுவைச் சேமிப்பதற்றாக இயக்கத்தை நிறுத்தி விட்டது. அவ்வளவுதான். ஆயினும் மருத்துவ ரீதியாக இறந்து விட்டதாக கூறி விட்டார்கள். உண்மையில் அவன் இறந்து விட்டானா?

இறப்பு என்பது என்ன? கலங்களின் (Cell) இறப்புத்தான், ஒருவனின் இறப்பு என்று வழமையாகக் கூறப்படுகிறது. அதாவது அந்த மனிதனின் இருதயத் துடிப்பு நின்றாலும், சுவாசம் நின்றாலும் மனிதன் உடனடியாக இறப்பதில்லை. இவை இரண்டும் செயற்படுவது நின்று 4-5 நிமிடங்களுக்குப் பின்னரே அவனது கலங்கள் இறக்கத் தொடங்குகின்றன. உங்களது நண்பர் இறந்ததற்குக் காரணம் குறிப்பிட்ட குறுகிய காலத்திற்குள் அவரது கலங்களுக்கு பிராண வாயு கிடைக்காததால் அவரது மூளையினது கலங்கள் மீளச் செயற்பட முடியாதவாறு பாதிக்கப் பட்டதேயாகும். அதாவது அக் குறிப்பிட்ட காலஎல்லைக்குள் அவரது இருதயத்தையும், சுவாசப் பையையும் இயங்க வைக்க முடியாததேயாகும்.

இறப்புப் பற்றிய இக் கருத்துத்தான் இது வரை மருத்துவ உலகினால் ஏற்றுக் கொள்ளப் பட்டதாக இருந்தது. ஆனால் அண்மையில் வெளிச்சத்திற்கு வந்துள்ள ஒரு கண்டுபிடிப்புக் காரணமாக மேற் கூறிய கருத்து கேள்விக்கு உரியதாகியுள்ளது. Univesity of Pennsylvanவைச் சார்ந்த Dr. Lance Becker ஒரு பிரேதப் பரிசோதனை செய்து கொண்டிருந்த போதுதான் அந்த ஆச்சரியமூட்டும் உண்மை வெளிப்பட்டது. மரணித்து ஒரு
மணித்தியாலயத்திற்கு மேற் சென்று விட்ட போதும் அந்த மனிதனது (அல்லது சடலமா?) கலங்கள் இறந்து விட்டதற்கான எந்த அறிகுறிகளும் தெரியவில்லை. வியப்படைந்த அவர் தனது பரிசோதனையைத் தொடர்நத போது மேலும் சில மணிநேரத்திற்குப் பின்னரும் கலங்கள் உயிரோடு இருப்பது தெரியவந்தது.

இறந்து சில மணி நேரங்களுக்குப் பின்னரும் கலங்கள் உயிரோடு இருந்த போதும் வைத்தியர்களால் ஏன் அவனைக் காப்பாற்ற முடியவில்லை என்ற கேள்வி உங்கள் மனதில் எழுந்திருக்கும். 5 நிமிடங்கள் பிராண வாயு இல்லாதிருந்தால், அக் கலங்களுக்கு பிற்பாடு பிராண வாயு கிடைத்த போதும் அவை இறப்பதைத் தடுக்க முடிவதில்லை. அது தான் உண்மை. ஆனால் ஏன்?

இதற்கு விடை கிடைத்தால் உங்கள் கேள்விக்கும் விடை கிடைத்து விடும். இறந்தவர்களுக்கு சிகிச்சையளிக்கப் போகும் முயற்சி ஆராய்ச்சியாக ஏற்கனவே ஆரம்பித்து விட்டது.

ஆராய்ச்சியானது கலங்களின் உள்ளே உள்ள சிறிய துணிக்கைகளுக்கு இட்டுச் செல்கின்றன. மிட்டோகொன்ரியா (Mitochondria) எனும் அவைதான் கலங்களுக்குத் தேவையான சக்தியை, ஒட்சி ஏற்றம் மூலம் உற்பத்தி செய்கின்றன. இது இன்னுமொரு வித்தியாசமான கடமையையும் செய்கிறது. வழமைக்கு மாறான கலங்களை (உதா புற்றுநோய்க் கலங்கள்) நெறிப்படுத்தப்பட்ட முறையில் மரணிக்கச் செய்கின்றன. இது புற்றுநோய்க்கு எதிரான உடலின் பாதுகாப்பு திட்டம் போலச் செயற்படுகிறது. எனவே 5 நிமிடங்களுக்குப் பின்னர் திடீரென ஒட்சிசன் கொடுக்கும் போது அக் கலங்களுக்கும் புற்றுநோய்க் கலங்களுக்கும் இடையே வேறுபாட்டை உணர முடியாமல் மரணிக்கச் செய்கின்றனவோ என எண்ணுகிறார்கள்.

ஆனால் அவசர சிகிச்சைப் பிரிவில் நாம் செய்வது என்ன? இருதயம் நின்று விட்ட ஒருவரை 10-15 நிமிடங்களுக்கு பின்னர் கொண்டு வந்து சேர்க்க முடிகிறது. உடனே இருதயத்தைத் துடிக்க வைக்க மருந்துகள் கொடுப்பதுடன் பிராண வாயுவையும் பம்ப் செய்கிறோம். இரத்த ஓட்டம் இல்லாததால் பட்டினி கிடந்த இருதயக் கலங்களை பிராண வாயுவில் மூழ்கடிக்கிறோம். இது அவற்றின் மரணத்தில் முடிகிறது.

இதற்கு மாறாக மாற்று முறையில் சிகிச்சை செய்தபோது முடிவுகள் சாதகமாக இருந்தன. அதாவது இருதயக் கலங்களை பிராண வாயுவில் மூழ்கடிக்காமல் அப்படியே விட்டுவிட்டு உடலுக்கான இரத்த ஓட்டத்தை செயற்கையாக heart-lung bypass machine மூலம் கொடுத்துக் கொண்டு இருதயத்தை துடிக்க வைத்தார்கள். 80 சத விகிதமானவர்களைக் காப்பாற்ற முடிந்தது.

அத்துடன் குருதியின் வெப்பத்தை 37 இலிருந்து 33 டிகிரி செல்சியஸ்க்கு குறைப்பதன் மூலம், பிராண வாயுவால் மூழ்கடிக்கும் போது கலங்களுக்கு ஏற்படும் இரசாயன மாற்றங்களை குறைக்க முடியும் என்றும் கண்டறிந்திருக்கிறார்கள். இதை வெளியிடங்களிலும் செயற்படுத்தக் கூடியதாக உப்பும் ஜசும் சேர்ந்த ஒரு வித கலவையை ஊசி மூலம் ஏற்றும் முறையையும் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

இவற்றை கடைப்பிடித்தால் மரணித்தவருக்கும் சிகிச்சை செய்து 'உயிர்ப்பிக்க' முடியும். ஆராச்சிகள் தொடர்கின்றன. அது நாளாந்த செயற்பாட்டிற்கு வந்து, அதுவும் எங்கள் நாட்டிற்கு வந்து சேரும் வரை மாரடைப்பு வராதிருக்க பிரார்திப்போமாக.

kathirmuruga@hotmail.com

Friday, November 14, 2008

நிலவில் இன்று தடம் பதிக்கிறது மூவர்ணக்கொடி

சென்னை : சந்திரயான்-1 செயற்கைக்கோளில் உள்ள எம்.ஐ.பி., கருவி, இன்றிரவு நிலவின் மேற்பரப்பில் மோதி இறங்கவுள்ளது. இதன் மூலம் இந்திய மூவர்ணக்கொடி, முதல் முறையாக நிலவின் மேற்பரப்பில் தடம் பதிக்கவுள்ளது. இந்தியா நிலவுக்கு அனுப்பிய முதலாவது செயற்கைக்கோளான சந்திரயான், தனது இறுதி சுற்றுப்பாதையான நிலவிலிருந்து 100 கி.மீ., தொலைவில் தற்போது சுற்றி வருகிறது. சந்திரயானில் மொத்தம் 11 ஆராய்ச்சி கருவிகள் உள்ளன. இவற்றில் ஒன்றான 29 கிலோ எடை கொண்ட எம்.ஐ.பி., (மூன் இம்பாக்ட் புரோப்) கருவி, சந்திரயானில் இருந்து இன்று இரவு 8 மணிக்கு கழற்றி விடப்படவுள்ளது.


சந்திரயான் திட்ட இயக்குனர் அண்ணாதுரை கூறியதாவது: எம்.ஐ.பி., கருவியை பிரித்து விடுவதற்கான உத்தரவு, பெங்களூருவில் உள்ள, "இந்தியன் டீப் சயின்ஸ் நெட்வொர்க்' மையத்திலிருந்து இன்று இரவு 8 மணிக்கு பிறப்பிக்கப்படும். எம்.ஐ.பி., கருவியில் உள்ள இன்ஜின் இயக்கப்பட்டு, சந்திரயானில் இருந்து நிலவை நோக்கி செலுத்தப்படும். இதையடுத்து, எம்.ஐ.பி., கருவி பிரிந்து, நிலவை நோக்கி பயணிக்கும். 25வது நிமிடத்தில் எம்.ஐ.பி., கருவி நிலவில் மோதி இறங்கும். இக்கருவியிலிருந்து பெறப்படும் புகைப்படங்கள், வரும் 16ம் தேதி நமக்கு கிடைக்கும். இவ்வாறு அண்ணாதுரை தெரிவித்தார். எம்.ஐ.பி., கருவியின் நான்கு புறங்களிலும் இந்திய மூவர்ணக்கொடி பொறிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய மூவர்ணக்கொடி முதல் முறையாக நிலவின் மேற்பரப்பில் தடம் பதிக்கவுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக, நிலவின் மேற்பரப்பில் தனது நாட்டுக் கொடியை இடம் பெறச் செய்த நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா நாளை பெறவுள்ளது.

Source : Dinamalar

Saturday, November 1, 2008

விற்றமின் B12 ம் வயதானவர்களின் மூளை சுருங்குதலும்

“ஒரு விற்றமின் B12 ஊசி அடித்துவிடுங்கோ” இவ்வாறு கேட்டு வருபவர்கள் சிலர் இருக்கிறார்கள்.

ஒரு சிலருக்கு இது உண்மையான மருத்துவத் தேவையாக இருந்த போதும் பலருக்கு அது தேநீர் குடிப்பது போல ஒரு பழக்கமோ என நான் எண்ணுவதுண்டு.

“ஒரு தேத்தண்ணி குடிச்சால்தான் உசார் வரும்” என்பது போல ஒரு ஊசி அடித்தால்தான் அவர்களுக்கு மனம் சார்ந்த உற்சாகம் வருவதுண்டு.

இது அவ்வாறிருக்க, வயதானவர்களின் இரத்தத்தில் B12 அளவு குறைவாக இருந்தால் மூளையின் கலங்கள் சிதைவடைவதற்கும், மூளையின் அளவு சுருங்குவதற்கும் வாய்ப்புள்ளதாக அண்மையில் வெளியான ஒரு ஆய்வு கூறுகிறது.

மூளையின் கலங்கள் சிதைவதானது அறிவார்ந்த செயற்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். முதுமையில் மறதி, அறளை பெயர்தல், அல்ஸீமர் நோய் போன்றவை நீங்கள் அறியாதல்ல. ஆயினும் இந்த ஆய்வின் முடிவுகளைக் கொண்டு விற்றமின் B12 குறைபாடுதான் அறிவார்ந்த செயற்பாடுகள் மந்தமாவதற்குக் காரணம் என்று அறுதியாகச் சொல்ல முடியாதுள்ளது.

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், குருதியில் கொலஸ்டரோல் அதிகரித்தல் ஆகியனவும் மூளை பாதிப்படைவதற்கு முக்கிய காரணங்களாகும்.

விற்றமின் B12 குறைபாடுதான் காரணம் எனச் சொல்ல முடியாததற்கு ஆதாரம் இதுதான்.

107 வயதானவர்களைக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வு இது. அதன்போது ஆரம்பத்திலும் வருடாவருடமும் அவர்களுக்கு வழமையான மருத்துவப் பரிசோதனை, இரத்தப் பரிசோதனை, அவர்களின் அறிவார்ந்த செயற்பாடுகள் பற்றிய மதிப்பீடு, முளையின் பொருன்மிய நிலையை அறிய MRI பரிசோதனை ஆகியன செய்யப்பட்டன.

அவர்கள் எவரது இரத்தத்திலும் B12 ன் அளவானது வழமையாக எதிர்பார்க்கப்படும் சாதாரணத்தை விடக் குறைவாக இருக்கவில்லை. அதாவது அவர்களுக்கு இரத்தத்தில் டீ12 குறைபாடு இருக்கவில்லை. ஆயினும் ஆய்வின் முடிவில், சாதாரண அளவானதின் குறைந்த நிலையில் B12 இருந்தவர்களது மூளையின் பருமனானது சாதாரண அளவானதின் உயர்ந்த மட்டத்தில் இருந்தவர்களை விட 6 மடங்கு அதிகமாகக் குறைந்திருந்தது.

இதன் அர்த்தம் என்ன?

நாம் வழமையாக எதிர்பாரக்கும் அளவை விட அதிகமான செறிவில் இரத்த B12 இருந்தால் முதுமையில் மூளை சுருங்குவது குறைவு என்பதாகும். எனவே எமது உணவில் B12 அதிகமுள்ள உணவுகளைச் சேர்த்துக் கொள்வது நல்லது. முதியவர்களுக்கு இது மேலும் முக்கியமாகும். இறைச்சி, மீன், பால் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

தாவர உணவுகளில் விற்றமின் B12 இல்லாததால் தாவர உணவு மட்டும் உண்போர் விற்றமின் B12குறைபாட்டிற்கு ஆளாவதற்கான சாத்தியங்கள் அதிகம். பாலூட்டும் தாய்மார், பாலகர்கள், மற்றும் முதியவர்களுக்கு இவ்விற்றமின் குறைபாடு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமாகும்.

பேரனீஸியஸ் அனிமியா Pernicious anaemia எனப்படும் ஒரு வகை இரத்தசோகை அதனால் ஏற்படும். நாக்குப் புண்படுதல், தோல் வெளிறல், பசியின்மை, அடிக்கடி ஏற்படும் வயிற்றோட்டம், மாதவிடாய் கோளாறுகள், நோயெதிர்ப்புச் சக்தி குறைதல் ஆகியன அதன் அறிகுறிகளாகும்.

அத்துடன் நரம்புகள் பாதிப்படைவதால் கால் கை விரல்களில் வலிப்பது போன்ற உணர்வு, கால்தசைகளில் வலி, தள்ளாட்டம், மாறாட்டம் போன்ற நரம்பு சார்ந்த அறிகுறிகளும் ஏற்படலாம்.

விற்றமின் குறைபாட்டை குணமாக்குவதற்கு விற்றமின் B12 ஊசியாகப் போடுவதே ஒரு வழி. ஆயினும் மூளை சுருங்குவதைத் தடுப்பதற்கு ஊசி தேவையில்லை. ஏனெனில் அவர்களுக்கு B12 குறைபாடு இருக்கவில்லை.

அத்துடன் அவ் ஆய்வானது அவர்களுக்கு ஊசி போடுவது பற்றியோ, மேலதிக B12 கொடுப்பதால் ஏதாவது நன்மை ஏற்படுமா என்பது பற்றியோ பரிசோதனை எதையும் செய்யவில்லை.

எனவே வயதானவர்கள் மேற் கூறிய உணவுவகைகளை சற்று அதிகமாக உண்டால் போதுமானது.


- டொக்டர்.எம்.கே.முருகானந்தன் -

வேற்றுக்கிரக வாசிகளுக்கு பூமியில் இருந்து வலைவீச்சு.

சுமார் 20 ஒளியாண்டுகளுக்கு அப்பால் மதிநுட்ப உயிரினங்கள் இருக்கலாம் என்று கருதத்தக்க கோள் ஒன்றை நோக்கி பூமியில் இருந்து தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இத்தகவல் குறித்த கோளை 2029 ஆண்டு வாக்கில் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுவதோடு அங்கு மதிநுட்ப உயிரினங்கள் இருக்கும் பட்சத்தில் மனிதன் பூமியில் இருந்து அனுப்பியுள்ள தகவலுக்கு பதில் தகவல் கிடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பதில் தகவல் கிடைக்க 40 ஆண்டுகள் காலம் காத்திருக்க வேண்டி இருக்கும். ூமியில் இருந்து அனுப்பப்பட்டுள்ள தகவலில் சுமார் 501 புகைப்படங்கள், வரைபடங்கள் மற்றும் எழுத்துரு தகவல்கள் உள்ளடங்கி இருக்கின்றன. இத்தகவல் கொத்து உக்கிரைனில் உள்ள பழைய சோவியத் கால உபகரணங்களைப் (giant radio-telescope) பயன்படுத்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.